Tuesday, September 4, 2012

மியூச்சுவல் ஃபண்ட் - ஒரு அறிமுகம்

வணக்கம் நண்பர்களே,

இதற்க்கு முந்தைய பதிவில், மியூச்சுவல் ஃபண்ட் என்பது குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றது எனக் கூறியிருந்தோம் அல்லவா ? இந்த பதிவில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய ஒரு அறிமுகத்தை பார்ப்போம்.



மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் என்பது,  முதலீட்டாளர்களிடம்  இருந்து பணத்தை வாங்கி, அதனை பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் அரசாங்க பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வரக்கூடிய  லாபத்தை முதலீட்டர்களுக்கு திருப்பி தருவது ஆகும். (சில சமயங்களில் நஷ்டமாகவும்  இருக்கலாம்) 

இதை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணமாக எடுத்து கொள்ளப்படும்.

மியூச்சுவல் ஃபண்ட் முறையில் நாம் முதலீடு செய்வது நமக்கு பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும்.  (தொடர்ந்து வரும் பதிவுகளை இதைப் பற்றி  விரிவாக பார்ப்போம்).



நாம் ஏன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் ?

இன்றைய சூழ்நிலையில் விலைவாசி ஏற்றம் என்பது மறுக்க முடியாத ஒரு விசயமாக உள்ளது. (இதை பணவீக்கம் என்று சொல்வார்கள்)

இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வோம். நீங்கள் வாங்க கூடிய ஒரு பொருளின் விலை பத்து ரூபாய் (ஒரு வருடத்தில்) அதிகரிக்கிறது. ஆனால் அதே வேளையில் அந்த பணத்தின் மதிப்பு எட்டு ரூபாய் மட்டுமே (ஒரு வருடத்தில்) அதிகரிக்கிறது எனில்,  நாம் பணவீக்கத்தினால் பாதிக்கப்படுகிறோம்.



பணவீக்கத்தை சமாளிக்க வேண்டுமெனில், நமது முதலீடுகள் அதை (பணவீக்கத்தை) தாண்டி வருவாய் அளிப்பதாக இருக்க வேண்டும். அதற்க்கு பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறப்பான தேர்வாக உள்ளது.


நமது பணம் பாதுகாப்பாக இருக்குமா ?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அனைத்தும் செபியின் (SEBI - Securities and Exchange Board of India) கட்டுப்பாட்டில் இயங்க கூடியவை ஆகும். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. 

எனவே இங்கு முதலீடு செய்ய கூடிய நமது பணம் பாதுகாப்பாகவே முதலீடு செய்யப்படும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தையின் போக்கிற்கு ஏற்ப லாபமாகவோ அல்லது நஷ்டமாகவோ மாறலாம். 

இதை தவிர்ப்பதற்கு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மேற்கொள்வதற்கு முன்பு உங்களது முதலீட்டு ஆலோசகரிடம் இது பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, முதலீடுகளை மேற்கொள்ளவும்.

-- SNP